Friday, April 19, 2013

உன்னை
நினைத்த பொழுதினிலே
இதயமும், இமைகளும்
துடித்து மலர்கிறது!
முகாரி ராகத்திலேயே
விழித்திருந்த என் காலம்
உன் தீண்டுதலினால்
ஆனந்த பைரவியாய் சிலிர்க்கிறது!
எப்போதும் என் நேரத்தின்
கீறல்களில் குளமான விழிகள்
இப்போதெல்லாம் - உன்
பிரியத்தின் தூரல்களில்
நிறைந்து வழிகின்றன..!
கைகூடாத கனவுகளுக்கிடையில்
கைக்கிளை நீக்கி கைத்தலம் செய்தாய்..!
அகத்தினில் அடைகாத்த
உனது காதலை - எனது
இதயத்தில் பொறிக்கச் செய்து
சேவலின் விதியை மீறி - ஒரு
சேவகனாய் எனைச் சேர்ந்தாய்
முறிந்து கிடந்த எனது சிறகுகள்
முளைத்து விரிந்தன நெஞ்சினில்...!
துயரத்தில் துவளும் நேரமெல்லாம்
எனக்கு செவிலித்தாயான - உன்
கருணையுள்ளத்தில் என்னுள்ளம் கசிகின்றது...!
சங்க இலக்கியங்கள் கண்ட சாரதியே...
கவிதையிலும், கதையிலும் கலப்பதைவிட
உன் நெஞ்சத்தோடு சங்கமித்து
நின்னைச்சரணடையவே விரும்புகிறேன்...!!
விருப்பத்தை ஏற்றுக்கொண்டு
வரம் தருவாயா வாசகனே....??

No comments:

Post a Comment