Saturday, April 6, 2013

நீ
1.
பசுமையில் குந்தியிருக்கும்
பனித்திவலை போல் என் வேர்களின்
ஆழம்வரை மூழ்கியிருக்கிறது சிறு பற்களால்
இதழ் கடித்து வெளிக்கும்
நிர்மலமாய் தெறிக்குமுன் மொழிகள்
மேகம் உடைத்து உயிர் நனையப் பெய்கிறாய் வெட்கங்களை
உருகிப் பெய்யும் துளிச்சாரலின் திசுக்களில்
எங்கிருந்தோ அள்ளிவந்த குளிர்ப்புன்னகையை
மழலை உயிருதிர்க்குமுன் தெத்திப்பற்சிரிப்பை
முத்தம் முடங்கிக் கிடக்குமுன்
குமைந்த உதடுகளை
என் பார்வைப் புலனினுள் சீராகச் செலுத்துகிறாய்

2.
சாகடிக்குமுன் மௌனத்தை கூர்தீட்டி எறிகிறாய்
நொடிக்கொருமுறை
பேனாமுனைகளில் தளும்பி அசைகிறதுன் கூச்சல்கள்
கோடையை களவாடிச்செல்லும்
விழியசைவுகளில்
பின்தொடர்ந்தால் பிடிப்பின்றி அசையுமுன்
இமையோரத்தில் ஆரம்பிக்கின்றாய்
மீண்டும் முதலிருந்தே
மௌனத்தை மனனம் செய்து ஒப்புவிக்கின்றாய்
மீண்டும்

No comments:

Post a Comment