Friday, April 19, 2013

விடியலை நிரப்பி
பொழுதொன்று கரைகின்றது மெல்ல
அவளின் கனவுகளை மறைத்தபடி!

கன்னக் கூட்டில்
சிரிப்பைச் சிறைப்படுத்தி
மெல்ல நடந்து வருகின்றாள்
அன்னமவள்!

தெருவோர நாய்களின் சிலம்பல்
பீதியை மனவெளியினில் ஊற்ற....
மிரட்சியின் மொத்த உருவமாயிந்த
வெள்ளைப் பட்சி!

வறுமையவளை பட்டை தீட்டியதில்
சுருண்டு போன உதரக்குழி..........
பசி மயக்கத்தில் வரண்டு கிடந்தது!

அவள்.....................
மெல்லன காற்றில் விரியும்
பட்டாம் பூச்சியல்ல!
எட்டாம் வகுப்பில் எட்டி நிற்கும்
சிட்டுக்குருவி....!

நெஞ்ச வரம்பில் ஏக்கம் விதைத்து
நெருஞ்சிக்குள் நிழல் தேடும்
குழவியவள்!

பி(ய்ந்து)ஞ்சு போன காலணியும்
தோய்க்க வழி துறந்த சீருடையும்
அவளின் சொப்பனங்களுடன்
போராடிக் கொண்டிருந்தன அழுக்கை விதைத்தபடி!

அம்மா......அவள் அம்மா !
அவள் .......
சின்ன விழிகளுக்குள் குளித்தாள்
கண்ணீருடன் கலந்தபடி!

பத்துப் பாத்திரம் தோய்த்து
தேய்ந்து போன விரல் ரேகைகள்.....
பிஞ்சு ஸ்பரிசத்தில் சிலிர்த்து
சிவந்து நின்றன பல நாழிகள்!

சோகம் வரலாறாகி
தொட்டுச் சென்றதில்....................
விட்டுப் போயின பள்ளிப் பாடங்கள்
திட்டுக்கள் நிறைந்தன ஞாபக மேட்டினில்!

நினைவுகளின் இடைஞ்சல்களில்
தடங்கள் தடுமாற.....
மலரிதழ் சாலையோரம் உதிர்கின்றது
தன் மேனியுணர்ச்சியை துறந்து!

வீதியின் பரபரப்பில்
தெரு நாய்கள் கூட அவளை மறக்க.....................
வறுமையின் கிழிசல்களாய்
நொருங்கிக் கிடக்கின்றது மென் பூவொன்று
தன் சுயம் மறந்து!

No comments:

Post a Comment