Saturday, July 25, 2015

ஜூலை ஐந்தின் முத்துக்களே

சிறு கூட்டுக் குருவிக்கும்
சிறகடிக்க ஆசை
ஒரு கூட்டுப் புழுவிற்கும்
சிறை உடைக்க ஆசை
எம் ஈழத் தமிழர்க்கும்
விடுதலை வேட்கை எனத்
திரியாகிக் கரியாகிப் போனீரே
ஜூலை ஐந்தின் முத்துக்களே
எம்மினச் சொத்துக்களே
குண்டு மழையிடை
கந்தகம் சந்தணமாக
வெந்தகம் நீறாக
தாயத்தாகம் தாரகமாக
தாராள மனத்துடன் – நாம்
பாராள வேண்டி நின்றீரே
ஜூலை ஐந்தின் முத்துக்களே
எம்மினச் சொத்துக்களே
பெற்றவரைப் பிரிந்து
உற்றவரை மறந்து
மற்றவர் விடியலுக்காய்
கதிரோடு புதிரானீர்
உம் விதியை உம் கையிலெடுத்தீர்
ஜூலை ஐந்தின் முத்துக்களே
எம்மினச் சொத்துக்களே
நன்னுடல் பொடிப்பட
செம்புலப் புயநீரென
செந்நீர் நிலம்புணர
பொன்னுடல் உருகிட
புகழுடல் பெற்றீரே
ஜூலை ஐந்தின் முத்துக்களே
எம்மினச் சொத்துக்களே
படர் துயர் துடைக்க
இடர்கள் பல நீக்க
நெல்லியடியில் நேர்த்தியாய்
நேற்று நீர் அடித்தீர்
பெரும்படை தகர்த்தீர்
எதிரியின் நம்பிக்கை
பொடியாக்கினீர்
ஜூலை ஐந்தின் முத்துக்களே
எம்மினச் சொத்துக்களே
நாடெங்கும் எதிரிகளஞ்சினர்
பாரெங்கும் பலரும் வியந்தனர்
வலுவிலா இனத்தின் விலாவானீர்
புது நிலை கொடுத்தீர்
புது வகை வகுத்தீர்
ஜூலை ஐந்தின் முத்துக்களே
எம்மினச் சொத்துக்களே
களமுனைச் சமநிலை சிதறடித்தீர்
உடலால் ஊடறுத்தீர்
கடலால் வழி தடுத்தீர்
ஈழக்காதலால் இரையானீர்
ஜூலை ஐந்தின் முத்துக்களே
எம்மினச் சொத்துக்களே
நங்கையர் கொங்கை அரியும்
கொடுங்கையர் சிரம் கொய்ய
தியாகத்தின் உச்சத்தில்
ஒளிரும் தீபமாகினீர்
ஜூலை ஐந்தின் முத்துக்களே
எம்மினச் சொத்துக்களே
படை நகர்த்தல் பல தடுத்தீர்
படைக்கலன்கள் பறித்தெடுத்தீர்
ஆழ்கடலில் நீள் கலனகள் மூழ்கடித்தீர்
மண் மீட்க மானம் காக்க
இரையாகினீர்
ஜூலை ஐந்தின் முத்துக்களே
எம்மினச் சொத்துக்களே
விடுதலைக்கு எனக் கருவாகி
விடுதலை வேள்வியில் கரியாகி
விடு தமிழர் தலை என வித்தாகிப்
போன கருவேங்கைகளே
ஜூலை ஐந்தின் முத்துக்களே
எம்மினச் சொத்துக்களே
ஆட்காட்டிக் குருவிகள் ஆங்கே
அதிகரித்துப் போனதனால்
சிட்டுக்குருவிகள் இங்கே
சுடலைக் குருவிகளாயின
ஞானியர் பொய்யுடன் என்றதைப்
பொய்யாக்கி உம்முடலை
மெய்யுடலாக்கி ய
ஜூலை ஐந்தின் முத்துக்களே
எம்மினச் சொத்துக்களே
இன்னும் பகை ஒளியவில்லை
இன்னும் துயர் தீரவில்லை
மீண்டும் எம் மண் வருவீர்
கதிர் ஒளியோடு ஒன்றாக
ஜூலை ஐந்தின் முத்துக்களே
எம்மினச் சொத்துக்களே
மீண்டும் தாய் மண் வருவீர் வருவீர்

Wednesday, July 22, 2015

மனிதன்

மனிதன்!

நேற்று உடல்நலத்தை விற்றுக்
காசாக்கி,
இன்று அந்தக் காசில் உடலைக்
காத்து
நாளையை யோசித்து, இன்றை
செலவழித்து
என்றும் வாழாது இருக்கிறான்!
சாவில்லாது போல் வாழ்ந்து,
வாழாது சாகிறான்!

நெருப்பு

பார்த்தாலும்,
பாராதிருந்தாலும்,
தொட்டாலும்
தொலைவாயிருந்தாலும்,
சுடும், தகிக்க வைக்கும்!
தீயாய் எரிக்கும்!
என்றும் எரியத் தயாராய்,
தணலாய் மனமாகும்,
உன்னை நினைக்கையில்!
பெண்ணே நீயும் நெருப்பு
தானோ?!

ஓட்டு

வோட்டு
உழுதவனையும், உண்டவனையும்
தொழுது பலரும் கேட்கும்
ஒன்று;
கேட்டவரில் ஒருவருக்கு
நிச்சயம் கிடைக்கும்!
போட்டவருக்கு தொழுகை
மட்டும்
மிச்சமாகும்!!

Tuesday, July 14, 2015

கவியாகும் காதலன்

நிச்சயமாகச் சொல்கிறேன்
நான் கவிஞனில்லை
கற்பனைக்கும் எனக்குமான
தூரம் எப்போதும் மிக மிக
அதிகமே
தொடர் சிந்தனைக்கும் எனக்கும்
என்றும்
தொடர்பு இருந்ததே இல்லை
ஆயினும்
என்னுடன் இருந்து நீ பிரிந்த
சில நிமிடங்களில்...
திரு விழா முடிந்த மறு நாளில்
அனைத்து அலங்காரங்ளையும்
இழந்து
அலங்கோலமாய்க் கிடக்கும்
வெட்டவெளி மைதானமும்
அறுவடை முடிந்து அம்மணமாகி
வானம் பார்த்து வெறித்துக்
கிடக்கும்
அடுத்த விதைப்புக்கு ஏங்கிக்
கிடக்கும்
பொட்டலான வயல்வெளியும்
கடைசிப் பேருந்தும் போய்விட
அழுது வடியும் தெரு விளக்கு
வெளிச்சத்தில்
விடியலுக்கு ஏங்கிக் கிடக்கும்
கிராமத்துப் பேருந்து
நிலையமும்
கோடை விடுமுறைப் பள்ளியும்
நீர் நின்று போன தெருவோரக்
குழாயடியும்....
இன்னும் இதுபோல் பிறவும்
தொடர்ச்சியாய் காட்சியாய்
என்னுள் நிறைய
எனக்கு கவிஞனாகி
விடுவேனோ என
பயமாயிருக்கிறது
எனக்காக இல்லையெனினும்
கவிதையைக் காப்பாற்றவாவது
என்னை விட்டுப் பிரியாதிருக்க
முயற்சி செய

விபச்சாரர்

விபச்சாரர்
அவர் பெண் பார்க்க வந்தபோது
"ஜாதகப் பொருத்தம் பார்ப்பதும்
லெளகீக விஷயங்கள் பேசுவதும்
தாய் தந்தையருக்காத்தான்
எனக்கு இதிலெல்லாம்
உடன்பாடில்லை"என்றார்
அவள் உண்மையில்
பூரித்துப்போனாள்
"பெண் பார்க்க வரும்போது
சேலை கட்டியிருக்கச்
சொன்னதுகூட
தனது தமக்கைக்காகத்தான்
எனக்கு எ ப்படி யிருந்தாலும்
சரிதான்"என்றார்
அவள் உள்ளம் குளிர்ந்து போனாள்
"திருமணத்தில் சாஸ்திர
சம்பிரதாயங்கள்
சரியாக இருக்க வேண்டும்
என்பதுகூட தாத்தா
பாட்டிக்காதத்தான்
எனக்கு துளிகூட
இதிலெல்லாம் நம்பிக்கையில்லை"
என்றார்
அவளுக்கும் இது
சரியெனததான்பட்டது
"திருமணமண்டபம் நல்லதாய்
இருக்கவேண்டும்
சாப்பாடுதான் ரொம்ப முக்கியம்
விருந்தினர்களின் திருப்திதானே
நம்மெல்லோருக்கும் முக்கியம்"
என்றார்
அதுகூட அவளுக்கு
ஏற்கும்படியாகத்தானிருந்தது
சீர்வரிசையில் ஒரு
சிறுகுறையென்று
அவரது ஒன்று விட்ட மாமன்
மண்டபத்தையே
உலுக்கியெடுத்தபோது
"எங்கள் மாமன் எப்போதும்
இப்படித்தான்
இங்கிதம் தெரியாத பிறவி
அவரைக் கண்டுகொள்ளாமல்
எனக்காகவேனும்
இதைமட்டும்
செய்துகொடுங்கள்"என்றார்
அவளுக்கும் வேறு
வழியிருப்பதாகத் தெரியவில்லை
கல்யாண அமர்க்களங்களெ ல்லாம்
முடிந்து
அவள் தங்கக் சிலையென
வெள்ளிச் செம்பேந்தி
அன்னமென பள்ளியைறயினுள்
அடியெடுத்து வருகையில்
மெய்மறந்து வாய்பிளந்தவன்
அவளை கட்டியணைத்து
அருகிலமர்த்திக் கொண்டபோது
"அணைத்துக் கொண்டது கூட
யார் சொல்லியேனும்"
எனச் சொல்லக்கூடுமோ எனப்
பயந்தாள்
அவன் மிக மெதுவாக
அவள் முகத்திரை விலக்கி
நிச்சயித்த நாள்முதல்
ஒத்திகை பார்த்து வைத்த
முத்தத்தை
சிதறவிட்டு கொடுத்தபடிச்
சொன்னான்
"இத்தனை ஆர்ப்பாட்டங்களும்
இதற்காகத்தான் இல்லையா"என்றான்
அவன் முகத்தில்
நியூட்டனால் கண்டுபிடிக்க
முடியாத
புதிய விதியை கண்டுபிடித்த
பெருமிதம் இருந்தது
அவள் தலை குனிந்து நின்றாள்
"பெறவேண்டியதை எல்லாம்
சாமர்த்தியமாய்
பெற்றுக்கொண்டும்
பத்தினிபோலும்
வேடமிட்டுக்கொண்டும்
சுகம்தற எத்தெனிக்கும் பெண்களை
விபச்சாரிகள் எனச் சொல்வதை
போலிந்த
ஆண்களை ஏன் விபச்சாரன் எனச்
சொல்வதில்லை"
அவளுள் ஒரு எண்ணக்கீற்று உடன்
வந்து போனது
அவளுள் உறங்கிக் கிடந்த தமிழச்சி
திடுமென்று வீறுகொண்டாள்
"தொட்டு தாலிகட்டிய கணவனை
விபச்சாரன் எனச்சொல்லல் தகுமா?
தமிழர் பண்பாடு ஏற்குமா ?
தவறல்லவா"என்றாள்
தமிழச்சியின் கூற்றும்
சரியெனவே இவளுக்கும் பட்டது
"வேண்டுமாயின் ஆர் விகுதி
சேர்த்து
விபச்சாரர் எனச்
சொல்லலாமா"என்றாள் இவள்
உள்ளிருந்த தமிழச்சி மௌனமாய்
சம்மதிக்க
இவள் லேசாகப் புன்னகைத்தாள்
வழக்கம்போல
எல்லா ஆண்களையும் போல
புன்னகைத்ததற்கான பொருள்
புரியாது
தனது முதல் முத்தத்தில்
அவள் நிலைகுலைந்து போனாள்
என
ஆண்மைக் குரிிய கம்பீரத்தோடு
அவளை அள்ளிக்கொண்டான்
அந்த "விபச்சாரர்"

அழகான வாழ்க்கை.!!
நதிபேசும் மொழிகேட்டு
ரசித்துக் கொண்டே
……..நெடுந்தூரம் மணற்பரப்பில் நடக்க
வேண்டும் !
புதிராக இருக்கின்ற எதுவும்
எந்தன்
……..பார்வையிலே பதில்சொல்லி
முடிக்க வேண்டும் !
விதியென்னும் புதைகுழியில்
வீழாமல் என்
……..விருப்பம்போல் கடைசிவரை
வாழ வேண்டும்!
அதிசயமாய் நான்மட்டும் சுவாசம்
செய்ய
……..ஆக்ஸிஜனும் எனக்குள்ளே
சுரக்க வேண்டும் !
கல்லறையில் எனைக்கொண்டு
வைத்த பின்னும்
……..கரையான்கள் அரிக்காத மேனி
வேண்டும் !
சில்லறையாய் எனதுஉடல்
சிதையும் போதும்
……..சிரிக்கின்ற திடமான உள்ளம்
வேண்டும்!
சல்லடையில் வார்த்தைகளைச்
சலித்தெடுத்து
……..சரித்திரங்ள் படைக்கவரும்
சொற்கள் வேண்டும் !
செல்லரித்து நாவில்சீழ் வடியும்
போதும்
……..சத்தியத்தைத் தவறாத வாக்கு
வேண்டும் !
கீச்சென்ற ஒருசொல்லால் பேசும்
அந்த
……..கிளியுடைய தாய்மொழியை
ரசிக்க வேண்டும் !
பூச்சரமாய் நிற்கின்ற பெண்ணை
அள்ளி
……..பூலோகம் அழியும்வரை
ருசிக்க வேண்டும் !
மூச்சற்றுப் போனாலும் மூளைச்
செல்லில்
……..முணுமுணுப்பாய்
கவிதைவரி ஒலிக்க வேண்டும் !
பேச்சற்றுக் கிடக்கின்ற நிலவும்
எந்தன்
……..பெயர்சொன்ன பின்னால்தான்
உதிக்க வேண்டும் !
பனித்துளிக்குள் எப்படியோ
நுழைந்து சென்று
……..பத்திரமாய் ஓரிரவு உறங்க
வேண்டும் !
தனிமையிலே எனைப்பர்த்துக்
காதல் செய்ய
……..தேவதையும் எனைத்தேடி
வருதல் வேண்டும் !
பனிக்கொட்டும் மாதத்தில்
குளிர்தணிக்க
……..பாய்விரித்துச் சூரியனில்
படுக்க வேண்டும் !
இனியெந்தன் இரைப்பையில் தீயை
அள்ளி
……..இறைத்தாலும் அதைஉண்டும்
செரிக்க வேண்டும் !
விரல்நீட்டித் தொடுகின்ற
தொலைவில் இங்கே
……..விண்மீன்கள் பூக்களாக
முளைக்க வேண்டும் !
இரவெல்லாம் மீண்டுமிங்கு
விடிவதற்கு
……..என்னிடத்தில் உத்தரவு கேட்க
வேண்டும் !
சிரமத்தைப் பாராமல் செவ்வாய்க்
கோளும்
……..எனைபார்க்க கீழிறங்கி வருதல்
வேண்டும் !
நிரந்தரமாய் என்கவிதை இனிக்கும்
என்றால்
……..நடுக்கடலில் இட்டவிதை
முளைக்க வேண்டும் !
மழைநீரில் தினம்நனைத்து
இயற்கையோடு
……..மணிக்கணக்காய் உறவாடி
கரைய வேண்டும் !
அழைக்காமல் என்னருகில் எமனும்
வந்தால்
……..அதையும்நான் கண்டிக்கும்
உரிமை வேண்டும் !
பிழைசெய்யா பருவத்தில் தாயின்
மார்பில்
……..பிள்ளையென பால்குடித்த
காலம் வேண்டும் !
உழைக்காமல் என்தேகம் இருந்தால்
எந்தன்
……..உயிரெடுத்து சிலுவையிலே
அறைய வேண்டும் !
தன்னிச்சை செயலாக உண்மை பேச
……..தனிநாக்கு எப்போதும்
எனக்குள் வேண்டும் !
என்கண்ணில் சூரியனை வைத்துக்
கொண்டு
……..எனைச்சுற்றி பூமிவர செய்தல்
வேண்டும் !
மின்னல்களில் மையூற்றி
பேனாவாக்கி
……..மின்சாரம் போல்கவிதை எழுத
வேண்டும் !
என்னுள்ளே தமிழ்ஞானம் அழியும்
என்றால்
……..அப்பொழுது அந்நொடியே
மரணம் வேண்டும் !