Wednesday, February 13, 2013


புத்தனுடன் நடத்தல்

மரணச்சிவப்பொளிரும் தேஜஸினை பின்தொடர்ந்து
நிழலிலிருந்து கசியும் அழுக்குகளை தின்றபடி
பிணந்து நடந்தேன் புத்தருடன்
புகைக்காட்டில் என்னை நிர்வாணப்படுத்தி
ரசித்தபின் அரசமரத்தடியில் புத்தர் பரிநிர்வாணமடைகிறார்
பயணம் பாதைகளில் செறிந்து வீழ்ந்த கபாலங்களை மசித்தபடியும்
தசைப்பள்ளத்தாக்குகளிலும்
பிரேதப்புயல் மத்தியிலும் நடப்பது.

பச்சைத்துரோகத்தால் அவமானத்தில் மண்டியிட்டழுது இறந்தவர்கள் மட்டும்
புத்தருடன் நடக்க முடியும்
உடலில் சொட்டு உயிரிருந்தாலோ
உனது தனிவீடோன்றை கூட்டி மெழுகி அழகாக்கும்
யோக்கியதை உனக்கிருந்தாலோ புத்தரை காண முடியாது
இடைநடுவில் என் மனைவி பிள்ளைகள் பற்றியும்
புத்தன் விசாரிக்கக்கூடும்
கிழிந்த யோனித்துண்டொன்றையும்
உடைந்த எலும்புச்சிதறல்களையும் பொட்டலமாக்கி நான்
புத்தனிடம் பரிசளிப்பேன்
அவரின் செல்லப்பிராணிகள் வீணீர் வழிய அதை ருசிக்கும்
கடைக்கண்ணில் குருதி சொட்டச் சொட்ட
எனதிறைவன் கண்மூடிக்கொள்வான்
நானென் ஆண்குறியைப் பிய்த்தெறிந்து பேடியாவேன்

நாளைப் பொழுதொன்றில் பயணம் முடிந்த பின்னும்
நானும் புத்தனும் நிர்வாணமாய் இருப்போம்
புத்தன் வளர்த்த பிராணிகளும்
அம்மணமாய் அலையும் என்பதில் ஐயமில்லை

No comments:

Post a Comment