Wednesday, February 13, 2013


அர்த்தமில்லாக் கவிதை (3)

உனக்காக உலகம்
பின்னிக் கொண்டிருக்கும்
சிலந்தி
வலையில் தான் நீ மாட்டிக்
கொள்கிறாய்
சிலந்தியாகவோ
பூச்சியாகவோ ...!!

நெருப்பு வளையம் ஒன்றின்
நீண்ட வெளியில்
ஓடுகின்றாய்
உறையும் பணியொன்றை
நோக்கி .....

நீ எறியும் சொற்கள் தான்
நீயாகின்றன
உனக்கான முகவரி
நீ தொலைத்த வார்த்தைகள்.
பூமியின் மிகப்பெரிய
ரகசியம் உண்மைகள்

காலமென்னும்
மூன்றாம் கண்ணை
எடுத்து வைத்துக் கொள்கின்றாய்
இருட்டில்
இருள்கின்றன என்கின்றாய்..??

உன் மூக்கு நுனியில்
இருக்கும் ஒன்றை உலகின்
மூலை வரை தேடுகின்றாய்
அங்கே இருள்கிறது
நீ உறக்கம் விழிக்கின்றாய்

கிடைக்காத பொருளைத்தான்
தேடுகின்றாய்
கிடைத்தவற்றில் உன்
துன்பத்தை சாடுகின்றாய்

இன்பக் குமிழிகள் அடைத்த
நீர் தான் உலகம்
அதில் வீழும் நெருப்புப்
பந்து நீ

மரங்களும் அழகு
மலர்களும் அழகு
இயற்கையே அழகு
உன்னில் அழகேது...??

துன்பம்
இன்பப் பூட்டின் சாவி
வாழ்க்கை மூடப்பட்ட
சொர்க்கம் -எரிவதெல்லாம்
ஒளியாகாது ...!!

உனக்கான
கற்கள் தான்
உனக்கான கண்ணாடியில்
எறியப்படுகின்றன
அதை எறிபவனும்
நீ தான்

நம்பிக்கை
முட்டாள்களின் நிர்வாணம்
அறிவாளிகளின்
புத்தாடை ...!!

No comments:

Post a Comment